மாணவர் எண்ணிக்கை குறைந்த பாடசாலைகள் தொடர்பில் அறிவியல் பூர்வ ஆய்வு – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

 


பாடசாலைகளின் ஆரம்ப மற்றும் நிறைவு நேரங்களை மாற்றுவது தொடர்பில் கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அறிக்கைகள் குறித்து இதுவரை எந்தவொரு இறுதிக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பாடசாலை நேரங்களில் மாற்றம் செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு ஏதேனும் தீர்மானத்தை மேற்கொண்டால், அது உரிய முறையில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், பாடசாலைகளை மூடுவது, கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை நேர மாற்றம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

அரசாங்கம் எந்தவொரு அரச பாடசாலையையும் தன்னிச்சையான முறையில் மூடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், மாணவர் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும் பாடசாலைகளின் நிலைமை தொடர்பில் விரிவான மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மாத்திரமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

குறிப்பாக, கடந்த பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ச்சியாகக் குறைந்து வரும் பாடசாலைகள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும், எந்தவொரு பாடசாலையையும் உடனடியாக மூடுவதற்கான தீர்மானம் அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

பல பாடசாலைகள் சுமார் 60 முதல் 70 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டவை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அக்காலத்தில் இருந்த மக்கள் தொகைப் பரம்பலும் தற்போதைய குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை அமைப்பும் பெருமளவில் மாறியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்படும் பாடசாலைகள் தொடர்பில் கோட்ட மற்றும் வலயக் கல்வி அலுவலகங்களிடமிருந்து தேவையான தகவல்கள் மற்றும் அறிக்கைகள் கோரப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் நிலைமையை முழுமையாக மதிப்பீடு செய்த பின்னரே எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.