இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைக்கலாசார பீட நுண்கலைத்துறையினரின் உலக நாடக நாள்.

 









க. பவதாரணி
நுண் கலைத்துறை கிழக்கு பல்கலைக்கழகம்

மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே தோன்றி வளர்ந்த தொன்மை வாய்ந்த கலைவடிவமாக நாடகம் விளங்குகிறது. இது இயல், இசை, நாட்டியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான கலை வடிவமாகும். மனித உணர்வுகளை நடிகர்களின் உடலசைவு, குரல் மற்றும் நடிப்பின் மூலம் நேரடியாக வெளிப்படுத்தும் கலைவடிவமாக நாடகம் திகழ்கிறது. நாடகம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், மனித வாழ்வின் நாடித் துடிப்பையும் சமூகத்தில் நிகழும் பல்வேறு விடயங்களையும் நம் கண்முன் பிரதிபலிக்கும் வலிமையான ஊடகமாகவும் விளங்குகிறது.புத்தகத்தில் படிப்பதையோ அல்லது திரையில் பார்ப்பதையோ விட, ஒரு மேடைக் கலைஞர் நேரடியாக நம் முன்னே தோன்றி உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அது பார்வையாளர்களின் இதயங்களை மிக எளிதாகவும் ஆழமாகவும் சென்றடைகிறது. அதனால் தான் நாடகம் மனித உணர்வுகளை நேரடியாகக் கடத்தும் உண்மையான கலையாகப் போற்றப்படுகிறது. அந்தவகையில் உலக நாடக நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்நாள் 1961 ஆம் ஆண்டு சர்வதேச நாடக நிறுவனம் (International Theatre Institute) என்பதனால் உருவாக்கப்பட்டது. முதன்முதலில் 1962 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து உலகெங்கிலும் மார்ச் 27 உலக நாடக நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைக்கலாசார பீடத்தின் நுண்கலைத்துறையிலும் உலக நாடக நாள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உலக நாடக நாள் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு நுண்கலைத்துறையில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. அக்காலத்தில் இளம் விரிவுரையாளர்களாகப் பணியாற்றிய பாலசுகுமார், சி. ஜெயசங்கர் ஆகியோரின் அர்ப்பணிப்பான உழைப்புடனும் ஏனைய விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தின் ஆதரவுடனும் ஐந்து நாட்கள் நீடித்த பிரம்மாண்டமான நாடக விழாவாக இது ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் தலைமையிலும் இந்நாடக விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறாக, 2026 ஆம் ஆண்டு உலக நாடக நாளை முன்னிட்டு இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையினால் 03.06.2026 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் உலக நாடக நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.நுண்கலைத்துறைத் தலைவர் திருமதி து. சத்தியஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ப. பிரதீபன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். நுண்கலைத்துறையின் பண்பாட்டு இசையணியின் வரவேற்புடன் ஆரம்பமான இவ்விழாவில், மூத்த நாடகக் கலைஞரான புதுவை அன்பன் என அழைக்கப்படும் திரு நாகமுத்து செல்வம் அவர்களும், மட்டக்களப்பில் கடந்த மூன்று தசாப்தங்களாக நாடக அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பாடினிகள் குழுவினரும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து மாணவர்களின் திறமைகளையும் சமூக விழிப்புணர்வையும் வெளிப்படுத்தும் பல அர்த்தமுள்ள நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. முதுநிலை விரிவுரையாளர் சு. சந்திரகுமார் அவர்களின் எழுத்து மற்றும் நெறிப்படுத்தலில் உருவாக்கப்பட்ட “போதைத்துரை” என்னும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. இந்நாடகம் போதைப்பொருளின் தீமைகளையும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் எடுத்துரைத்தது. குறிப்பாக இளைஞர்களிடையே பரவி வரும் போதைப்பழக்கத்தின் ஆபத்துகளை உணர்த்தும் சமூக விழிப்புணர்வு நாடகமாக இது அமைந்தது. அதனைத் தொடர்ந்து பேராசிரியர் சி. ஜெயசங்கர் அவர்களின் ஆற்றுப்படுத்துகையில் உருவான “மூத்தம்மாக்களின் பேரர்கள்” என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் முன்னோர்களின் அறிவு, பாரம்பரியக் கலைகள் மற்றும் சமூகப் பண்பாட்டு மரபுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. இன்றைய சமூகத்தில் பாரம்பரிய அறிவும் கலை மரபுகளும் புறக்கணிக்கப்படும் நிலையைச் சுட்டிக்காட்டியதுடன், மட்டக்களப்பின் மரபுவழித் திருமண முறைகள் உள்ளிட்ட பல பண்பாட்டு அம்சங்களையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. மேலும் முதுநிலை விரிவுரையாளர் கு. ரவிச்சந்திரன் அவர்களின் நெறிப்படுத்தலில் “எம்மைப் பிடித்த பிசாசுகள்”, “நல்ல மாப்பிள்ளை” ஆகிய மேடை நாடகங்களும் “மாறும் பாதை” எனும் வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டன. அவற்றில் “எம்மைப் பிடித்த பிசாசுகள்” என்ற நாடகம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. மனித வாழ்வில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்திய மாற்றங்கள், அதன் நன்மை தீமைகள் மற்றும் சமூகத்தின் மீது அது செலுத்தும் தாக்கங்கள் ஆகியவை சிந்தனையைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்பட்டன. அதேவேளை, விரிவுரையாளர் து. கௌரீஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் உருவாக்கப்பட்ட “பிள்ளை அழுத கண்ணீர்” என்ற சிறுவர் நாடகமும் மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் மரம் நடுவதன் அவசியத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதர்களின் பொறுப்பும் கடமையும் என்பதைக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்நாடகம் அமைந்திருந்தது. மேடையேற்றப்பட்ட அனைத்து நாடகங்களிலும் நுண்கலைத்துறையில் கற்கும் சிறப்புக் கற்கை மற்றும் பொதுக் கற்கை மாணவர்கள் பங்குபற்றி தமது கலைத்திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நாடகங்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகள், பண்பாட்டு விழுமியங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம் போன்ற சமகாலக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றதுடன் பார்வையாளர்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றன. நாடகம் என்பது வெறும் பொழுதுபோக்குக் கலை மட்டுமல்ல அது சமூகத்தின் கண்ணாடியாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த கருவியாகவும் திகழ்கிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான உலக நாடக நாள் விழாவும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. மாணவர்களின் படைப்பாற்றல், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் கலைநுணுக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்நாடக விழா கலைக்கலாசார பீடத்தின் வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.