ஆன்மீகத் தளமாகவும் உள்ளூர் உருவாக்க மரபுகளின் களமாகவும் மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழா.

 


 

 

 

பேராசிரியர் சி. ஜெயசங்கர்

மாமாங்கத் திருவிழா அடியார்களை ஒன்று கூட்டும் ஆன்மீகக் களமாகவும்; உள்ளூர் வளங்களிலிருந்து உருவாக்கப்படும், உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் வருடார்ந்த சந்தைப்படுத்தும் களமாகவும்: அப்பம். பிட்டு உள்ளிட்ட உள்ளூர் உணவு வகைகளை உண்டு மகிழும் உணவுத் திருவிழாகவும் இயங்கி வருவது மரபாகவும்; குறிப்பாக மரபுரிமையாகவும் இருப்பது குறிப்பிடப்பட  வேண்டியதாகும்.

மிகப்பரந்த எல்லைக்களைக் கடந்தும் அடியார்களை ஒன்று கூட்டும் வருடாந்த மாமாங்கத் திருவிழாவானது உள்ளூர் உற்பத்திகளின் திருவிழாவாகவும்; உள்ளூர் உணவுத் திருவிழாவாகவும் பரிணமத்திருப்பது பல வகைகளிலும் சிறப்புடையதாகும். 

மேலும் மண்டூர்க் கீரை போன்ற குறிப்பிட்ட ஊர்களின் மரபாகவும்; மரபுரிமையாகவும் காணப்படுகின்ற விடயங்களையும் பரவலடையச் செய்யும் களமாகவும் மாமாங்கத் திருவிழா அமைவது அதன் பன்முகச் சிறப்புத் தன்மையை வெளிப்படுத்துவதாகும்.

இதுபோல் அருந்தலாகிப் போன மண்டூர் கத்தரி, பழுகாமக் கத்தரி போன்ற உள்ளூர் இனங்களை மீளக் கொண்டுவரும் களங்களாக; விளங்குவதுடன் இவற்றின் மரபுரிமைகளைப் பெற்றுக் கொள்வதும்; பேணுவதும்; விரிவாக்குவதுமான அறிவுசார் நடைமுறைகள் முன்னெடுப்பது முக்கியமாகிறது.

உள்ளூர் மரபாகிய பழைய பித்தழைப் பாத்திர, பண்டங்களின் விற்பனைக் களமாகவும் மாமாங்கத் திருவிழா காணப்படுகின்றது. உள்ளூரில் உருவாக்கப்பட்ட இப்பித்தளைப் பாத்திர, பண்டங்கள் போன்றவற்றை உள்ளூரில் தக்கவைப்பதன் மூலம் மேற்படி மரபுரிமைப் பொருள்களை வாங்கவும் விற்கவுமான இடத்தின் அவசியமும் இங்கு உணரப்பட வேணடியதாகிறது.

சவால்களுக்கு மத்தியிலும் உள்ளூர் வளங்களிலிருந்து பல்வேறு உள்ளூர் உற்பத்திகள், உருவாக்கங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் விரிவாக்கம் செய்வதற்குமான இயற்கையான பெருங்களமாகத் திகழும் மாமாங்கத் திருவிழாச் சூழலை உள்ளூர் அறிவு, திறன், ஆக்கக் களமாக வலுப்படுத்திக் கொள்வதும் விரும்பப்படுகின்ற விடயமாகும். அடியவர்களின் மகிழ்வான வாழ்வே மாமாங்கரின பெரு விருப்பாகவும் இருக்கும்.

கடந்த பதினைந்து வருடங்களாக கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையும் மாமாங்க ஆலய நிர்வாகத்தின் பெரு விருப்புடன் கூடிய ஆதரவுடன் மரபுரீதியான களரி, தோரண கட்டடக் கலைமரபுகளில் உள்ளூர் ஆற்றுகைகள் இரவு பகலாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன் உள்ளூர்க் கலைமரபுகளின் காட்சிப்படுத்தல்கள், கலை ஆளுமைகளை மாண்பு செய்தல் கலந்துரையாடல்கள் என்பன முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.

கடந்த சில வருடங்களாக மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழாத்தின் 'நன்னிலம்' குழுவினர் அருந்தலாகிப் போன, இருந்தும் அறியப்படாமல் போன, மரங்கள், செடிகள், கொடிகள், விதைகள் என உணவாகவும்; மூலிகையாகவும் பயன்படுத்துபவற்றை அறிமுகப்படுத்தல், பகிர்தல், பரவலாக்கல் என மாமாங்கத் திருவிழாச் சூழலில் செயற்பட்டு வருகின்றது. சித்த ஆயுர்வேத வைத்தியர்கள், உள்ளூர் விஷக்கடி, மிருக வைத்தியர்கள் சுற்றுச் சூழல் நிபுணர்கள், இயற்கை விவசாய அனுபவம் கொண்ட ஆளுமைகள், சமையல் கலை வல்ல பெண்கள், ஆண்கள், சுற்றுச் சூழலியல் அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள் ஆகிய ஆவலர்களின் சந்திப்புக் களமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவைபோல் பல்வேறு விடயங்களும் பல்வேறு குழுக்களால் பல்வேறு காலகட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வரலாறுகளும் இத்தீர்த்தக்கரைக்கு உண்டு.

இவற்றுடன் உள்ளூர்க் கைத்தறி உற்பத்திகளுக்கான களமாகவும், உள்ளூர்ப்புத்தகங்கள் காட்சிப்படுத்தலும் விற்பனைக்குமான களமாகவும் இன்னும பலவாகவும் விரிவடைவதும்; உள்ளூர் மரபுரிமைகளின் திருவிழாக் களமாகவும் இயங்குகின்றது. இது யுனெஸ்கோவில் பதிவிடவும் முன்னெடக்கப்படவும் வேண்டிய விடயமாகும். அரச நிர்வாகமும் ஆலய நிர்வாகமும் இணைந்து இவ் விடங்களைச் சாத்தியப்படுத்த வேண்டியிருக்கிறது.

மேலும் மிகவும் முக்கியயமாக, உடலுக்குத் தீங்கான குறிப்பாகச் சிறுவர்களுக்குப் பாதகமான உணவுப் பண்டங்கள் நீக்கம் பெற்றதும்; சூழலுக்கும் பயன்படுத்துபவர்களுக்கும் பாதகமான 'பிளாஸ்ரிக்' பொருள்கள் நீங்கப்பெற்ற இடமாக ஆலய வளாகம் இருப்பது நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பெரும் பயன் விளைப்பதாகும் பிளாஸ்ரிக்குகளைப் பாவிப்பதும் பிரச்சனைக்குரியது. பயன்படுத்திய பின் கழித்துவிடுவது நிலத்தைப் பிளாஸ்ரிக்குகளின் புதைகுழியாக்கி வருவது மிகவும் ஆபத்தானது என்பதும் அறியப்பட்டதுதான். எனவே பிளாஸ்ரிக்குகளிலான பொருள்கள் நீக்கம் பெற்ற சூழலாக ஆக்குவது பெரும்பேறான உயிர்களின் வாழ்க்கையைப் பேணுவதும் ஆகிறது.