கடுவலை பகுதியில், பதிவு செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் என்ற போர்வையில், மிக இரகசியமாக நடத்தப்பட்டு வந்த மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை, மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.
இந்தச் சோதனையின்போது 18,500க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், குறித்த நிலையத்தில் இருந்த 6 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை (27) கடுவலையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வெளிப்பார்வைக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்களைத் தயாரித்து விநியோகிக்கும் நிறுவனம் போலக் காட்சியளித்த அந்த வளாகத்துக்குள், சட்டவிரோதமான முறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு வந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது, தலா 180 மில்லி லீற்றர் அளவுடைய 18,575 உள்நாட்டு மதுபான போத்தல்கள் (மொத்தம் 3,345.5 லீற்றர்), வெளிநாட்டு மதுபான லேபிள்கள் ஒட்டப்பட்ட 1 லீற்றர் அளவுடைய 4 போத்தல்கள், 750 மில்லி லீற்றர் அளவுடைய ஒரு போத்தல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் எத்தனால் அடங்கிய ஒரு போத்தல் மற்றும் பல்வேறு அதிநவீன மதுபான உற்பத்தி உபகரணங்கள், மதுபானம் தவிர, அங்கிருந்து 50 கிராம் 200 மில்லிகிராம் கேரள கஞ்சா என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேக நபர்களும் 30, 43, 58, 59 மற்றும் 62 ஆகிய வயதுகளை உடையவர்கள் என்றும் இவர்கள் அனைவரும் மிஹிந்தலை, மருதானை, வத்தளை, தெற்கு வேவெட, கெட்டலாவ மற்றும் சிப்பிகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டபூர்வமான குடிநீர் வியாபாரத்தின் மறைப்பைப் பயன்படுத்தி, இந்தச் சட்டவிரோத மதுபானங்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் வணிக ரீதியாக விநியோகிக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.





