15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பௌத்த மதகுரு, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தந்தையின் சகோதரர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான தேரர் கண்டி – பஹிரவகந்த பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 25 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், அதே பஹிரவகந்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பௌத்த மதகுருவும் பெண்ணும் கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்டு, அதற்கு அடுத்த நாள் (21) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேக நபரான தேரரை இன்றைய தினம் (ஜூன் 01) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





