காத்தான்குடி ஆற்றங்கரையில், உணவக வசதிகளுடன் கூடிய நீர்ச்சுற்றுலா படகு சேவையுடன் அமைக்கப்பட்ட புதிய வாவிப் பூங்கா அபிவிருத்தித் திட்டத்திற்காக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுற்றுலா அமைச்சின் ஊடாக 9.6 மில்லியன் ரூபா நிதியை காத்தான்குடி நகர சபைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ், காத்தான்குடி நகர சபையினால் காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதியில் புதிய வாவிப் பூங்கா அமைக்கப்பட்டு, தற்போது திட்டம் முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் காணப்படுகிறது.
இந்த அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக, உணவக வசதியுடன் கூடிய நீர்ச்சுற்றுலா படகு ஒன்று நேற்று (16) மாலை காத்தான்குடி வாவிக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுவரை போதிய கவனிப்பின்றி இருந்த காத்தான்குடியின் பிரதான இயற்கை வளமாகிய காத்தான்குடி ஆற்றங்கரையை, க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்து, பிரதேசத்தை சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேற்றும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அதன் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் எம். பீ. எம். பிர்தௌஸ் நளீமி ஆகியோருக்கு, காத்தான்குடி மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த புதிய வாவிப் பூங்காவும், உணவக வசதிகளுடன் கூடிய நீர்ச்சுற்றுலா படகு சேவையும், எதிர்காலத்தில் காத்தான்குடியின் சுற்றுலா வளர்ச்சி, பொதுமக்களின் ஓய்வு நேர தேவைகள் மற்றும் உள்ளூர் பொருளாதார முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





