அரசாங்கம் அனர்த்தத்தை காரணம் காட்டி மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு அரசாங்கத்திடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் அதிகமாக எமது தமிழ் மக்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் கடந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டதிலிருந்து இன்னும் மீளாத நிலையில் இருந்து வரும்போது, இந்த அனர்த்தம் ஏற்பட்டதனால் தமிழ் மக்களே மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது குறைகள் இந்த அரசாங்கத்தினால் நிவர்த்திக்கப்பட வேண்டும்.
திருகோணமலையில் புத்தர் சிலை வைத்தமைக்கு பொலிசார் நியாமான முறையில் நடந்துகொள்ளாமல் தையிட்டியில் அவர்களது அராஜகத்தை காட்டி கைதுகளையும் செய்திருந்தனர்.
தமிழர்கள் எதிர்பார்க்கின்ற மாகாண சபை அதிகாரம் கூட இந்த அரசும் வழங்குமா என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது.
வரப்போகும் புத்தாண்டிலாவது இந்த அரசாங்கம் தமிழர்கள் எதிர்பார்க்கும் தீர்வினை வழங்குமா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்.
ஜனாதிபதியை நாம் அண்மையில் சந்தித்த போதும் மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்த வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றோம்.
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்து நாம் மாகாண சபை தேர்தலை பிற்போடாது அதை நடாத்த வேண்டும் எனவே கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்.
தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப பயணித்துக் கொண்டு இருக்கின்றது. கஜேந்திரகுமார் செல்லும் சமஸ்ரியை நாம் ஒருபோதும் மறுத்ததில்லை அந்த செற்பதத்தை நாம் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதையே சொல்லிவருகின்றோம் என்றார்.





