தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது.

 


2025-2026 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. 
 
இதன்படி, சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கக்கூடிய பாடசாலைகளின் பட்டியல் மற்றும் தொழிற்கல்வித் துறைகள் உள்ளிட்ட தகவல்கள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் சிறப்பு அறிவிப்புகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன. 
 
இந்தநிலையில், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் எந்தவொரு முடிவுகளும், இந்த மாணவர் சேர்ப்பின்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
இதன்காரணமாக, மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பில் சேரவும், தரம் 13 வரை பாடசாலைக் கல்வியைத் தொடரவும், உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வித் தகுதியைப் பெறவும் வாய்ப்பளிப்பாக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
இதன்படி, 2024-2025 அல்லது கடந்த 2 ஆண்டுகளுக்குள் சாதாரண தரத் தேர்வுக்குத் தோற்றிய எந்தவொரு மாணவரும் தங்கள் பகுதியில் தொழிற்கல்வி பிரிவுள்ள பாடசாலைகளில் தரம் 12க்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது. 
 
இந்த கற்கைகளில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், வாகன தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சேவைகள், இரத்தினம் மற்றும் நகை தொழில்நுட்பம், அழகு கலாசாரம் உட்பட்ட பல்வேறு துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.