சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும், 3 கோடி ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு சொகுசு வாகனங்கள் பண்டாரகம பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மொன்டெரோ வகை ஜீப்பும், கேரவன் வகை வேனும் ஆகிய இரு வாகனங்களும் பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் சோதனை செய்து மீட்கப்பட்டன.
மேல் மாகாண புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்டாரகம வீதாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட வேன் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றொரு வாகனமும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை, களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பண்டாரகம பகுதியில் கைப்பற்றப்பட்ட சொகுசு ஜீப் மற்றும் வேனில் தவறான பதிவு இலக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட வேனில் பயன்படுத்தப்பட்டிருந்த பதிவு இலக்கம், ஹொரணை மில்லனிய பகுதியிலுள்ள பாதுகாப்பு துறையில் பணிபுரியும் ஒருவரது சட்டப்பூர்வமான வாகனத்திற்கு சொந்தமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல், ஜீப்பில் இருந்த பதிவு இலக்கம் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் கணினி தரவுகளில் போலியாக மாற்றப்பட்டதாகவும், அதன்மூலம் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவு இந்த வாகனங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
 

 
 




 
 
 
 
.jpeg) 
.jpeg)