டில்லியில் உள்ள முஸ்தபாபாத் பகுதியில் நேற்று காலையில் இடம்பெற்ற கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பட்டியலை டில்லி பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அந்தப்பட்டியலின் படி, உயிரிழந்தவர்களில் இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளரும் இருப்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்த 11 பேரில் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பெண்கள். நான்கு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸாரின் பட்டியலின் படி, இடிபாடுகளில் சிக்கி 11 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேர் சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 5 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியிருக்கும் எஞ்சியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தலைநகர் டில்லியின் வடகிழக்கு பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலையில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. டில்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இந்தச் சம்பவம் அதிகாலை 3 மணி அளவில் நடந்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சென்று, மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.