தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி, மற்றும் சுயநிர்ணய கோரிக்கையை நிலைநிறுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரனை ஆதரித்து எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என யாழ்.வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக யாழ்.வணிகர் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கை அரசு இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக சித்தரித்து அதற்கான முழு வேலைத்திட்டத்தையும் சுதந்திரத்திற்கு பின் 1948 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்திக் கொண்டு வருகிறது.
தமிழ் மக்கள் தங்கள் தாயகமான வடக்கு, கிழக்கைப் பாதுகாத்து உரிமையோடு வாழ்வதற்காக கடந்த 75 வருட காலமாக போராடிவருகின்ற போதும் எமது போராட்டம் இன்னும் வெற்றி பெறவில்லை.
தமிழ் தலைமைகள் எமது உரிமையை நிலைநாட்டவும், சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கும் எடுத்த முயற்சிகள் அத்தனையும் இன்றுவரை சிங்களத் தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் பேச்சுவார்த்தை என்ற ரீதியில் காலத்தை கடத்தி தட்டிக்கழிக்கப்பட்டு தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தர் வரை ஏமாற்றியுள்ளார்கள்.
நாம் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய தாயகம். நாம் தனித்துவமானவர்கள். எமக்கு சுயநிர்ணய உரிமையுண்டு. எமது நிலம், மொழி, கலை, கலாசாரம். பண்பாடு போன்றன பாதுகாக்கப்பட வேண்டும்.