(கல்லடி செய்தியாளர்)
இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய மன்ற கலந்துரையாடல் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் பாசிக்குடாவில் நேற்று திங்கட்கிழமை (24) இடம் பெற்றது.
இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னெடுப்புக்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலையில் தேசிய பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட உபாயங்கள் தொடர்பாக இதன்போது தெளிவூட்டப்பட்டது.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சர்வதேச ரீதியாகப் பொருளாதாரத்தில் பாதிக்கபட்ட பல நாடுகளில், எமது நாட்டை மிக விரைவில் பொருளாதார தளம்பல் மற்றும் பணவீக்கத்திலிருந்து புதிய உபாயங்களையும் வட்டி வீதங்களில் மாற்றங்களையும் ஏற்படுத்தி சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்டமைக்கு வங்கிகளின் பங்குகள் அளப்பரியது. அபிவிருத்திகளின் பங்காளர்களாக வங்கிகள் காணப்படுவதை இதன் போது ஆளுநர் சுட்டிக்காட்டினர்.
இந் நிகழ்வில் துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் உள்வாங்கியதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .ஜஸ்டினா முரளிதரன், மத்திய வங்கியின் உதவி ஆளுநர் டபிள்யு தில்ருக்சி, அரச உயர் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், வங்கி முகாமையாளர்கள், தொழில்சார் நிபுணர்கள், தொழில் முயற்சியாளர்கள், மற்றும் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.