உலகம் முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டார்.
வெள்ளிக்கிழமை (06) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குத்துவிளக்கேற்றி விழாவைச் சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் GOQii சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் விஷால் கோண்டல், பிரபல நட்சத்திர சமையல் கலைஞர் விகாஸ் கன்னா மற்றும் கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபி தல்லா உள்ளிட்ட பல முக்கிய இந்திய வம்சாவளிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
வெள்ளை மாளிகை வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு தீபாவளிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
இதன்போது, நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய சமூகப் பிரதிநிதிகள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு அனுமன் சாலிசாவின் பிரதியொன்றைப் பரிசாக வழங்கினர்.
அனுமன் சாலிசா பிரதியை ஜனாதிபதி டிரம்புக்கு வழங்கியதில் பெருமையடைவதாக விஷால் கோண்டல் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், “ஓவல் அலுவலகத்தில் ஒரு கூட்டு மகிழ்ச்சித் தருணம். ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தீபாவளியைக் கொண்டாடியது ஒரு கௌரவம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் உயர்மட்ட அரசியல் மையமான வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டம், அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளிச் சமூகத்தின் கலாசாரப் பாரம்பரியத்தையும் தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.





