சிறுவர் உளநலப் பாதுகாப்பில் விழிப்புடன் செயற்படுவோம்!




“சிறுவர்களின் மாற்றங்களை கவனிப்போம்; அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்” – உளசமூக ஆதரவு மையப் பணிப்பாளர்

சர்வதேச சிறுவர் தினத்தை (01.10.2026) முன்னிட்டு, சிறுவர்களின் உளநலத்தைப் பாதுகாப்பதில் பெற்றோர்களும் சமூகத்தினரும் அதிக அக்கறையுடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டும் என உளசமூக ஆதரவு மையத்தின் பணிப்பாளர் திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

எமது கண்களை எவ்வாறு அக்கறையுடன் பாதுகாத்துக் கொள்கின்றோமோ, அதேபோன்று ஒவ்வொரு சிறுவரின் உடல் நலத்துடன் அவர்களின் உளநலத்தையும் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உளவியல் தாக்கங்களின் வெளிப்பாடாக சில சிறுவர்களிடம் நடத்தையில் மாற்றங்கள் அல்லது வழக்கத்திற்கு மாறான செயற்பாடுகள் ஏற்படுவதை அவதானிக்க முடிவதாகத் தெரிவித்த அவர், இத்தகைய மாற்றங்களை வெறுமனே ஒரு குறையாகப் பார்க்காமல், அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய உணர்வுகள், அனுபவங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து பெற்றோர்களும் சமூகத்தினரும் அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“ஒரு சிறுவரின் நடத்தையில் ஏற்படும் மாற்றம், அவருக்குள் ஏதோ ஒன்று மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். எனவே, அவர்களின் செயல்களை மட்டும் கவனிப்பதை விட, அவர்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ள முயற்சிப்போம்” என திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவர்கள் தங்களது அச்சங்கள், கவலைகள், சந்தேகங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைத் தயக்கமின்றிப் பகிர்ந்துகொள்ளக்கூடிய பாதுகாப்பான குடும்ப மற்றும் சமூகச் சூழலை உருவாக்குவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் நடத்தையில் தொடர்ச்சியான அல்லது கவலைக்கிடமான மாற்றங்கள் தென்படும் சந்தர்ப்பங்களில், அவர்களை தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக உரிய பெரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து, தேவையான உளசமூக ஆதரவு மற்றும் வழிகாட்டலைப் பெற்றுக்கொடுப்பது முக்கியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“சிறுவர்களைப் பாதுகாப்பது என்பது அவர்களின் உடல் நலத்தை மட்டும் பாதுகாப்பதல்ல; அவர்களின் உணர்வுகள், மனநிலை மற்றும் எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாப்பதாகும்” எனக் குறிப்பிட்ட திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ், அனைத்து சிறார்களுக்கும் தனது இனிய சர்வதேச சிறுவர் தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

உளசமூக ஆதரவு மையம்
“உளநிலையை காப்போம் – மனிதநேயத்தை வளர்ப்போம்.”