சர்வதேச சிறுவர் தினத்தில் இலங்கை சிறுவன் உலக சாதனை நீச்சலில் புதிய உலக சாதனை படைத்த 6 வயது மாணவன் ஜெய்ஹரி

 




 



 
























































கொழும்பு: கொழும்பில் வசித்து வரும் ரகுநாதன் – லக்ஷ்மி தம்பதியரின் 6 வயது மகன் ஜெய்ஹரி, நீச்சலில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இவர் கொழும்பு சென். பெனடிக்ட் கல்லூரியில் முதலாம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார். நீச்சலில் ஜெய்ஹரிக்கு இருந்த ஆர்வத்தையும் திறமையையும் கண்டறிந்த அவரது பெற்றோர், அவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தனர். இதனையடுத்து, சென். பெனடிக்ட் கல்லூரியின் நீச்சல் பயிற்சி மையமான பென்ஸ் அகுவாட்டிக்ஸில் இணைந்து, அவர் தீவிர நீச்சல் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். குறிப்பாக, பிரெஸ்ட் ஸ்ட்ரோக் (Breaststroke) முறையில் ஜெய்ஹரிக்கு இருந்த தனித்திறமையை அடையாளம் கண்ட மூத்த நீச்சல் பயிற்றுநர் கசுன் வர்ணக டி சில்வா, அவருக்கு தொடர்ந்து தீவிரமான பயிற்சிகளை வழங்கி வந்தார். பிரெஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் முறையில், ஏனைய மாணவர்களுடன் ஒப்பிடுகையில் ஜெய்ஹரியிம் காணப்பட்ட சிறப்புத் திறமையின் அடிப்படையில், அவரால் உலக சாதனை ஒன்றை நிகழ்த்த முடியும் என அவரது பயிற்றுநர் நம்பிக்கை கொண்டார். இதனைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன், செப்டம்பர் 30ஆம் திகதி காலை, சென். பெனடிக்ட் கல்லூரியின் நீச்சல் தடாகத்தில் சோழன் உலக சாதனை முயற்சி நடைபெற்றது. இந்தச் சாதனை முயற்சி சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் இடம்பெற்றது. சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, பொதுச் செயலாளர் கப்டன் எச்.கே. இந்திரநாத் பெரேரா, செயற்குழு உறுப்பினரும் மாத்தறை மாவட்டத் தலைவருமான மேஜர் ருக்சான் உள்ளிட்டோர், மாணவன் ஜெய்ஹரியின் உலக சாதனை முயற்சியை நேரடியாகக் கண்காணித்தனர். உலக சாதனை முயற்சியின் போது, ஜெய்ஹரி 50 மீட்டர் தூரத்தை பிரெஸ்ட் ஸ்ட்ரோக் முறையில் 1 நிமிடம் 2 விநாடிகளில் நீந்தி நிறைவு செய்தார். அவரது இந்தச் சாதனை முயற்சியைப் பரிசீலித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள், இது உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, உலக சாதனை படைத்த மாணவன் ஜெய்ஹரியை கல்லூரி நிர்வாகத்தினர், அவரது நீச்சல் பயிற்றுநர்கள், சக மாணவர்கள் மற்றும் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்திப் பாராட்டினர். சாதனைக்கான அங்கீகாரமாக, ஜெய்ஹரிக்கு சட்டகமிடப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், முத்திரை மற்றும் சாதனைப் பதிவுக் கோப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இளம் வயதிலேயே நீச்சல் துறையில் உலக சாதனை படைத்துள்ள ஜெய்ஹரியின் சாதனை, அவரது பெற்றோர், பயிற்றுநர்கள் மற்றும் சென். பெனடிக்ட் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதுடன், இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் சாதனையாகவும் அமைந்துள்ளது.