பிரித்தானியாவைச் சேர்ந்த சதுரங்க மேதை சிறுமி ஒருவர், பெண்கள் கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டத்தை வென்ற வரலாற்றிலேயே மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
வடமேற்கு லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான 11 வயதுடைய போதனா சிவானந்தன் என்பவரே மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றவர் ஆவார்.Geographic Reference
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற 46அவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தனது மூன்றாவது மற்றும் இறுதி பெண்கள் கிராண்ட் மாஸ்டர் (WGM) தகுதியைப் பெற்றார்.
இது ஒரு சான்றளிக்கப்பட்ட பட்டத்துக்குரிய நிலை செயல்திறனாகும் என சர்வதேச சதுரங்க சம்மேளனம் (FIDE) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சாதனையையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாக சர்வதேச சதுரங்க சம்மேளனத்திடம் தெரிவித்த போதனா சிவானந்தன், 'தொடர்ந்து வரலாறு படைக்க' விரும்புவதாகவும் கூறினார்.
ஏற்கனவே, பிரித்தானியாவின் மிக இளவயது மகளிர் சதுரங்க சம்பியனாகவும், எந்தவொரு விளையாட்டிலும் சர்வதேச அளவில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மிக இளவயது நபராகவும் ஆகியுள்ள இந்தப் பாடசாலை மாணவியின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் இது சமீபத்திய மைல்கல் ஆகும்.
ஹரோவைச் சேர்ந்த போதனா சிவானந்தன், இங்கிலாந்தின் முதன்மை வீரருக்கு ஒதுக்கப்பட்ட இடமான முதலாவது சதுரங்க பலகையில் அனைத்து 11 சுற்றுகளிலும் விளையாடி, எட்டு புள்ளிகளுடன் போட்டியை நிறைவு செய்தார்.
WGM பட்டத்திற்குத் தேவையான 2300 மதிப்பீட்டு வரம்பை, தனது மூன்றாவது மற்றும் இறுதி தகுதியைப் பெறுவதற்கு முன்பே அவர் கடந்திருந்தார்.
வரலாறு படைப்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை FIDE பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில்,
'இதைச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால், இத்தோடு நின்றுவிடாமல், தொடர்ந்து முன்னேறி வரலாறு படைக்கவும் விரும்புகிறேன்' என்றார்.
ரஷ்யா மற்றும் யுக்ரெய்ன் ஆகிய இரு நாடுகளுக்காகவும் விளையாடியுள்ள கெத்தரினா லக்னோ, தனது 12ஆவது வயதில் WGM பட்டத்தை வென்று, இதற்கு முன்னர் குறைந்த வயதுக்கான சாதனையை வைத்திருந்தார். சீனாவைச் சேர்ந்த ஹூ யிஃபானும் தனது 12ஆவது வயதில் இப்பட்டத்தை வென்றதோடு, தனது 14ஆவது வயதில் உயர்நிலை பகிரங்க கிராண்ட்மாஸ்டர் (GM) பட்டத்தைப் பெற்ற மிக இளைய பெண்ணாகத் திகழ்கிறார்.





