கலால் வரித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர்கள் குழுவினர் கண்டனப் போராட்டம்

 


கலால் வரித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜகிரியாவில் அமைந்துள்ள அதன் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக சமூக ஆர்வலர்கள் குழுவினர் கண்டனப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் போது, சுயதொழில் சங்கத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான பிரதீப் சார்ல்ஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

கலால் வரி ஆணையாளர் பிரேமரத்ன, அண்மையில் சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளதாகவும், இதற்கான நிதி அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து பின்னால் உள்ள லஞ்ச ஊழல் விபரங்களுடன் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இந்த ஒட்டுமொத்த லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறையான ஆவணங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பெரிய அளவிலான திட்டங்களைச் செயல்படுத்துவதாகக் கூறி, நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் சிறு அளவிலான சுயதொழில் வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் செயலில் இந்த ஆணையாளர் ஈடுபட்டு வருகிறார் என்றும் பிரதீப் சார்ல்ஸ் சாடினார்.

தகுதியற்ற நபர்களை இத்தகைய உயர் பதவிகளில் அமர்த்துவதை விடுத்து, திணைக்களத்தில் உள்ள தகுதியான அதிகாரிகளுக்கு இந்த பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ஜனாதிபதி இதில் உடனடியாக தலையிட்டு இந்த ஊழல்வாதிகளை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அடுத்த கட்டமாக கடுமையான மரணச் சவப்பெட்டி மற்றும் மலர்வளையங்களை ஏந்திய போராட்டங்கள் திணைக்களத்திற்கு முன்னால் வெடிக்கும் என்றும் எச்சரித்தார்.