தேசிய மட்ட சாதனையாளர் செல்வி ரிஷார்த்தகியின் புதிய பாடல் வெளியீடு: பெரிய நீலாவணை பேச்சியம்மன் ஆலயத்தில் 19ஆம் திகதி அரங்கேறுகிறது!



 SIVAKUMAR 

 

கலை மற்றும் இசை ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, இளம் பாடகி செல்வி ருக்மாங்கதன் ரிஷார்த்தகி அவர்களின் புதிய பாடல் வெளியீட்டு நிகழ்வு, எதிர்வரும் 19.06.2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பெரிய நீலாவணை ஶ்ரீ மஹாவிஷ்ணு பேச்சியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.


பெரியநீலாவணை ஶ்ரீ மஹாவிஷ்ணு பேச்சியம்மன் ஆலய பரிபாலன சபையினரின் சிறப்பான ஏற்பாட்டில், ஆலய நிர்வாக சபையினரின் முன்னிலையில் இந்நிகழ்வு அரங்கேறவுள்ளது. இப்பாடல்  வெளியீடானது, அமரர் செல்வரெட்ணம் நவரெட்ணம் அவர்களின் 28ஆவது வருட ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இப்பாடலைப் பாடியுள்ள செல்வி ரு. ரிஷார்த்தகி, ருக்மாங்கதன் - துவேனிகா தம்பதிகளின் புதல்வியாவார். மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் இவர், பல தேசிய மட்ட இசைப் போட்டிகளில் பங்கேற்று, தேசிய மட்டத்தில் முதலாம் இடங்களைப் பெற்று சாதனை படைத்த ஒரு திறமைசாலி என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் குரலில் உருவாகியுள்ள இப்புதிய பாடலுக்கான வரிகளை கோபாலகிருஷ்ணன் கிருஷ்ணசௌறி எழுதியுள்ளார். பாடலுக்கான இசை அமைப்பினை மேற்கொண்டு, ஒலிப்பதிவு செய்துள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஜெ. சங்கர்ஜன்.

 இசைப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக அமையவுள்ள இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் பல கலை ஆர்வலர்கள், இசை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, கலைப்பிரியர்கள் மற்றும் ஊரவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு, இளம் சாதனையாளரை வாழ்த்தி நிகழ்வைச் சிறப்பிக்குமாறு அன்போடு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.