2026 ஆம் ஆண்டில் பொது விடுமுறை நாட்கள் மற்றும் பௌர்ணமி தினங்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மேலதிக ஆணையாளரும், மதுவரித் திணைக்கள பேச்சாளருமான ஏ.ஏ.ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த 19 நாட்களில் 12 பௌர்ணமி தினங்கள், சுதந்திர தினம், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நாட்கள், உலக மது ஒழிப்பு தினம் மற்றும் நத்தார் தினம் ஆகியவை அடங்கும்.
அதன்படி ஜனவரி 3, பெப்ரவரி 1,மார்ச் 2, ஏப்ரல் 1, மே 1, மே 2, மே 30, ஜூன் 29, ஜூலை 29, ஓகஸ்ட் 27, செப்டம்பர் 26, ஒக்டோபர் 25, நவம்பர் 24, டிசம்பர் 23 ஆகிய பௌர்ணமி தினங்களிலும் பெப்ரவரி 4 (சுதந்திர தினம்), ஏப்ரல் 13 (சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய தினம்), ஏப்ரல் 14 (சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினம்), ஒக்டோபர் 3 (உலக மது ஒழிப்பு தினம்), டிசம்பர் 25 (நத்தார் தினம்) அகிய தினங்களிலும் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 13, 14) மற்றும் நத்தார் தினம் (டிசம்பர் 25) ஆகிய மூன்று நாட்களில் மட்டும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்களில் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு மட்டும் மதுபானம் வழங்க அனுமதி உண்டு.இவற்றில் சுற்றுலா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 3 நட்சத்திர மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பீடு பெற்ற விருந்தகங்கள், மதுவரி உரிமம் FL 07 ஐக் கொண்ட Boutique விருந்தகங்கள், பூட்டிக் வில்லாக்கள் மற்றும் சிறப்பு அனுமதிகளின் கீழ் இயங்கும் விருந்தகங்கள் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.





