மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது.












மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில்  மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16)  இடம்பெற்றது.

இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை இனங்கண்டு உரிய விவசாயிகளுக்கான நஸ்ட ஈடுகளை வழங்குதல், விவசாய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு வங்கிகளினால் மேற்கொள்ளப்படவுள்ள ஊக்குவிப்பு நடைமுறைகள் தொடர்பாகவும்  காப்புறுதி கிடைக்காமை, மண் அகழ்வு, விவசாய வீதி அபிவிருத்தி போன்ற மேலும் பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.

தற்போதைய நீர்ப்பாசன செயற்திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  கால்வாய்களை மீள்கட்டுமானம் செய்தல், அழிவடைந்த தென்னை பயிர்ச் செய்கையாளர்களுக்கான நஸ்ட ஈடுவழங்குதல், உரத்திற்கான கொடுப்பனவை வழங்குதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக  விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் பல தீர்க்கமான முடிவுகள் இதன் போது எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜெகன்நாத், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன்  மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.