2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிசா புயல் ஏற்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய இயற்கை அனர்த்தத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கொண்டுள்ளது.

 

 


 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிசா புயல் ஏற்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய இயற்கை அனர்த்தத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலை ஆய்வாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கும், வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களுக்கும் கனமழை தொடர்ச்சியாக கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தெளிவான வானிலை காணப்பட்டாலும் கூட இடையிடையே மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

ன்று (28) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடைய கரையோர பகுதிகளில் காற்றினுடைய வேகம் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

தற்போது கிடைத்து வருகின்ற கனமழை நாளை நண்பகல் நிறைவு பெற்றாலும் கூட இடையிடையே கனமழை முதல் மிக கனமழை திருகோணமலை மாவட்டத்திற்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. எதிர்வரும் 30ஆம் திகதி அளவில் இந்த புயல் சென்னைக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கின்றபோது வடக்கு மாகாணத்தினுடைய யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சிக்கு சற்று வேகமான காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

தொடர்ச்சியாக கிடைத்து வருகின்ற கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினுடைய பல தரை மேற்பரப்பு நீர்நீலைகள் அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அதன் மேலதிக நீர் வான் கதவுகளூடாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. எனவே மக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது அவர்களுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும்.

வடகீழ் பருவக்காற்று கால பகுதியில் வங்காள விரிப்பாடு தாழமுக்கங்கள் ஏற்படுவது வழமையானது. 2024 ஆம் ஆண்டு கூறிய வடக்கு பருவப் பெயர்ச்சி காற்றின், கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வெளியிட்ட முன்னறிவிப்பில், இந்த ஆண்டு ஐந்துக்கு மேற்பட்ட தாழமுக்கங்கள் வங்காள விரிகுடாவில் ஏற்படும் என எதிர்வு கூறி இருந்தேன். அதன் அடிப்படையில் இது நான்காவது தாழமுக்கமாக இருக்கின்றது. இந்த தாழமுக்கம் ஒரு புயலாக மாறி இருக்கின்றது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிசா புயலுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய தாழமுக்க புயலாக இந்த பெங்கால் புயலை கூறலாம். கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய இயற்கைய அனர்த்தத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கொண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே கடந்த 23ஆம் திகதி தாழமுக்கம் தோற்றம் பெற்றதில் இருந்து மீனவர்களை தொடர்ச்சியாக கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எதிர்வரும் முப்பதாம் திகதி வரைக்கும் அவர்கள் இந்த நிலைமையை பின்பற்ற வேண்டும். எதிர்வரும் முப்பதாம் திகதிக்கு பிறகு நாட்டிலும் சரி அல்லது கடற்பகுதியிலும் சரி நிலைமை சீராக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதனால், எதிர்வரும் முப்பதாம் திகதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருப்பது அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றார்.