காட்டு யானைகள் விடுதலைப்புலிகள் போன்று நடந்து கொள்கின்றன இதனால் பிரதேசவாசிகள் தமது கிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள்

 


காட்டு யானைகள் விடுதலைப் புலிகள் போன்று நடந்து கொள்வதனால்  இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை,வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை  என  முன்னாள் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை  (06) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாநேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு    வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியராட்சி பதிலளித்துக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டே  இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் கூறுகையில்,

யானைகளுக்கு  குழிகள் வெட்டும் திட்டத்தை நான் ஆரம்பித்தேன்.யானைகளுக்கு ஆதரவாக தடையுத்தரவு பெறும் தரப்பினரது வீடுகளை யானைகள் தாக்குவதில்லை.வழக்கு தாக்கல் செய்பவர்களின் வீடுகளையும் யானைகள் தாக்குவதில்லை.அப்பாவி மக்களின் வீடுகளை தான் யானைகள் தாக்குகின்றன.இறுதியில் யானைகளும் உயிரிழக்கின்றன.மனிதர்களும் உயிரிழக்கிறார்கள்.இது  தேசிய பிரச்சினை

காட்டு யானைகள் விடுதலைப்புலிகள் போன்று நடந்து கொள்கின்றன இதனால் பிரதேசவாசிகள் தமது  கிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள்.இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை, வீதியில் செல்ல முடியவில்லை. மாணவர்கள் பாடசாலைக்கு கூட செல்ல முடியவில்லை. யானைகள் பொதுமக்களை அடித்துக் கொல்கின்றன

விவசாயத்துறையை மேம்படுத்த வேண்டுமானால்  யானை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். சுற்றாடல் துறைசார் நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களிடம் இதற்கு  சிறந்த திட்டமில்லை  என்றார்.