மதுபானம் தயாரிக்கும் 52 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 44,000 இற்கும் அதிகமான மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக இலங்கை மதுவரித் திணைக்களம் (07) பாராளுமன்றத்தில் வழிவகைகள் பற்றிய குழுவுக்குத் தெரிவித்தது.
இவ்வாறு போலியான ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்கள் தொடர்பில் ஒரு நிறுவனத்திடம் ஏறத்தாழ 40 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டிருப்பதாகவும் குறித்த திணைக்களம் குழுவில் அறிவித்தது.
வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் (07) கூடியதுடன், இதில் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தபோதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
மதுபானப் போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் ஒவ்வொரு போத்தலில் இருந்தும் அரசாங்கத்துக்கு 2,900 ரூபா வரி இழப்பு ஏற்படுவதாக வழிவகைகள் பற்றிய குழுவில் அண்மையில் வெளிப்பட்டதுடன், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வழங்கிய பணிப்புரைக்கு அமைய மதுவரித் திணைக்களத்தினால் இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.