மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நேரத்தில் இவ்வாறு மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குவது எதற்காக என்று வினவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வினோரதராதலிங்கம், மக்களை படுகுழிக்குள் தள்ளிவிட்டு அரசியல்வாதிகளை மாத்திரம் முன்னேற்ற எடுக்கும் முயற்சிகள் மாற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற சுகாதார அமைச்சருக்கு
எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில
உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடு முழுவதும் கடந்த காலங்களில் சீனி, முட்டை, நெல் மாபியாக்களை போன்று
மருந்து மாபியாக்களும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின்
பின்னணியில் செயற்படுவதாக நாங்கள் அறிகின்றோம். இந்த ஆளும் எதிர்க்கட்சி
சார்ந்த அரசியல்வாதிகளின் பின்னணியிலுயே மருத்துவ துறையின் வீழ்ச்சி
தொடர்கின்றது.
நாட்டில் 20 ஆயிரம் வைத்தியர்களில் 1500 பேர் நாட்டை விட்டு
சென்றுள்ளதுடன் மேலும் 5 ஆயிரம் பேர் வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றனர்.
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பாடசாலைகள் மூடப்படுவதை போன்று
வைத்தியசாலைகளும் மூடப்படுமா? என்று எண்ண வேண்டியுள்ளது.
இவ்வாறு இவர்கள் வெளியேறி செல்ல அரசாங்கம்தான் காரணமென்றால் இதுவரையில்
அரசாங்கம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்கின்றேன்.
யாழ். வைத்தியசாலையில் 8 வயது சிறுமியொருவரின் கை அகற்றப்பட்டுள்ளது. அவர் காய்ச்சலுக்காக சென்றவர். வைத்தியர்கள், தாதிகள் விரக்தியில் இருப்பதனாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. அரச வைத்தியசாலைக்கு நோயாளர்கள் செல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சுகாதார அமைச்சருக்காக மாத்திரமன்றி முழு அரசாங்கத்துக்கும் எதிராகவே கொண்டு வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை வன்னியில் மதுபான சாலைகள் பலவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். அரசாங்க கட்சியை சேர்ந்தவர்களுக்கு இது வழங்கப்படுகின்றதா என்பது பிரச்சினையில்லை. ஆனால் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நேரத்தில் இவ்வாறு மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குவது எதற்காக என்று கேட்கின்றேன்.
இந்த அரசாங்கத்துக்குள் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதற்காக அவர்களின் சகாக்களுக்கு இவ்வாறு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கி அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக கருதுகின்றோம். இது மக்களுக்கான அரசாங்கமாக இருக்காது” என்றார்.