நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டி நாவலப்பிட்டி - மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இன்று (04) காலை 6:45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த விபத்திலிருந்து முச்சக்கரவண்டியின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து நடந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண்டிருந்த மூவரின் சடலங்களையும் மீட்டு, நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் நெடுங்காலமாக மக்கிப்போயிருந்த அந்த யூக்கலிப்டஸ் மரத்தை வெட்டி அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பலமுறை அறிவித்தும், அதற்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படாததாலேயே இந்த விபத்து நேரிட்டுள்ளதாகப் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
விபத்துத் தொடர்பாக நாவலப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





