
மட்டு. துஷாரா
திருகோணமலை, கறுமலையூற்று கடற்கரைப் பகுதிக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு விமானப்படையினரால் விதிக்கப்பட்டுள்ள தடை, மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் சுதந்திரத்தையும் பறிக்கும் செயலாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் (05) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயகவுக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள வெள்ளைமணல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கறுமலையூற்று கடற்கரைக்கு, இன்று காலை முதல் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் செல்வதற்கு விமானப்படையினரால் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையின் காரணமாக குறித்த கடற்பரப்பை நம்பி வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் தமது அன்றாடத் தொழிலை முன்னெடுக்க முடியாமல் நிர்க்கதியாகியுள்ளனர்.
முப்பது வருடகால கொடூர யுத்தம் நிலவிய காலப்பகுதியில் கூட இப்பகுதி மீனவர்களுக்கு இவ்வாறானதொரு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி அவர்கள் மக்களுக்கான ஒரு புதிய அரசியல் கலாசாரத்தையும், சுதந்திரமான சூழலையும் கட்டியெழுப்ப முயற்சிக்கும் இவ்வேளையில், பாதுகாப்புத் தரப்பினரின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவே அமைகின்றன.
மக்களின் இயல்பு வாழ்வைப் பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, கறுமலையூற்று கடற்கரையில் மீனவர்கள் தமது மீன்பிடித் தொழிலை சுதந்திரமாக முன்னெடுக்கவும், பொதுமக்கள் கடற்கரையைப் பயன்படுத்தவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நிரந்தரமாக நீக்க ஜனாதிபதி உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட வேண்டும்.
மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அதற்கு எதிராகத் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.





