மக்களுக்குப் பொறுப்புக் கூறும் மக்களுக்கான தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்களுக்கு எவ்விதத் தேவையும் இல்லை, அதற்காகக் கனவு காண்பவர்கள் திருடர்களும், ஊழல்வாதிகளும், போதைப்பொருள் வர்த்தகர்களுமே ஆவர் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.மாத்தறை, நில்வலா கங்கையை அண்டிய உப்புநீர்த் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் 2019 - 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் (27) மாலிம்பட பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
2019ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த உப்புநீர்த் தடுப்பின் காரணமாக, மாத்தறை மாவட்டத்தின் கம்புறுபிட்டிய, கெகனதுர, மாலிம்பட, வில்பிட, மடிஹ மற்றும் தலல்ல உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள விவசாயக் காணிகள் தொடர்ச்சியாகப் பாதிப்புக்குள்ளாகின.
அந்த சமயம் ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்காதிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 1200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கமைய, 2019 சிறுபோகம் முதல் 2022 சிறுபோகம் வரையிலான தொடர்ச்சியான 7 போகங்களுக்காக இந்த இழப்பீடு வழங்கப்படுகிறது.
குறித்த போகங்களில் தமக்கு ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் குறித்து கமநல சேவை நிலையங்களுக்கு முறையாக அறிவித்த அனைத்து விவசாயிகளுக்கும் இந்த நிவாரணம் கிடைக்கப் பெறவுள்ளதுடன், இதற்கமைய பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத 12,800 ஏக்கர் காணிக்காக இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
அடையாள ரீதியாக 250 விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் தலைமையில் இழப்பீடுகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், இழப்பீட்டுக்குத் தகுதியான ஏனைய அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 14 நாட்களுக்குள் இழப்பீடுகளை வழங்கி முடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
மக்களின் அரசாங்கமும், ஒழுக்கத்துடனான வலுவான பொருளாதாரமும் தற்போது நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதால், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக வரலாற்றில் அதிகூடிய இழப்பீட்டுத் தொகையை வழங்க முடிந்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு குறுகிய காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். மக்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் அதேவேளை, படிப்படியாக அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தேசிய பொருளாதாரத்தில் அவர்களைப் பங்காளிகளாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது
இதற்கமைய, சிறு வர்த்தகர்களுக்குக் கடனுதவி வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சின் கீழ் 90,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் 'சமூக சக்தி' வேலைத்திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டுக்கு 25 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது
நாட்டின் வரலாற்றில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் முக்கிய பொருளாதாரக் காரணிகள் பலவற்றில் தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத் தரவுகளைப் போலவே மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வளவு தூரம் இலகுவாகிறது என்பதைக் கொண்டே நாட்டின் பொருளாதார வளர்ச்சி பிரதிபலிக்கிறது
மக்களுக்குப் பொறுப்புக் கூறும் மக்களுக்கான தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்களுக்கு எவ்விதத் தேவையும் இல்லை, அதற்காகக் கனவு காண்பவர்கள் திருடர்களும், ஊழல்வாதிகளும், போதைப்பொருள் வர்த்தகர்களுமே ஆவர்
அவர்கள் செய்த ஊழல், மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, அவர்கள் பதற்றமடைந்து பல்வேறு பொய்ப் பிரசாரங்களை பரப்பி வருவகின்றனர். எனினும் தற்போதைய அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை வென்று மேலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அத்துடன், இப்பணியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மாத்தறை மாவட்ட செயலகம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மாத்தறை வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு நிரந்தர வருமான வழியை ஏற்படுத்தி, உயர்தர வாழ்க்கைத்தரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், மாத்தறை மாவட்டத்தைப் பரந்தளவிலான அபிவிருத்திக்கு உட்படுத்துவதற்கும் அரசாங்கம் அதிக வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுள்ளோம்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய மிக முக்கியமான வழி கல்வி என்பதை உணர்ந்துள்ள அரசாங்கம், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை நவீனமயமாக்குவதுடன், 50 தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்து பரந்தளவிலான கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்றார்.





