(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர் )
மட்டக்களப்பில்
தமிழ் - முஸ்லீம் மக்களிடையே இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது
தடவையாக மாபெரும் உதைபந்தாட்டத் திருவிழா அரங்கேறவுள்ளதாக உதைபந்தாட்டத்
தொடரின் பிரதான அனுசரணையாளர் ஜோதி தெரிவித்தார்.
பாடுமீன் பொழுது
போக்குக் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்டச்
சங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் இரண்டாவது தடவையாக நடாத்தப்படவுள்ள
பத்மநாபா ஞாபகார்த்த உதைபந்துச் சவால் கிண்ணம் தொடர்பான அறிமுக நிகழ்வில்
கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ் அறிமுக நிகழ்வு மட்டக்களப்பு பாடுமீன் விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (05) மாலை இடம்பெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டதாவது:-
இந்நிலையில்
அடுத்த வருடம் கிழக்கு மாகாண மட்டத்தில் தமிழ்,சிங்கள மற்றும் முஸ்லீம்
மக்களிடையே நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் நடாத்தத் திட்டமிட்டுள்ளோம்.
எனவே விளையாட்டினூடாக நம்மிடையே இன நல்லுறவு வலுப்பெறும் என்றார்.
மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்டச் சங்கச் செயலாளர் தேவராஜா காந்தன் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-
இப்போட்டித்
தொடரில் 32 அணிகள் போட்டியிடவுள்ளன. இப்போட்டிகள் யாவும் மட்டக்களப்பு
வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளன. தேவையேற்படும் போது வேறு மைதானங்களிலும்
போட்டிகள் இடம்பெறும்.
இத்தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இப்போட்டியில்
முதலாம்,இரண்டாம்,மூன்றாம் மற்றும் நான்காம் இடம்பெறும் அணிகளுக்கு முறையே
200000,100000,50000,25000 ரூபா வழங்கப்படும். அத்தோடு சிறந்த விளையாட்டு
வீரர் மற்றும் கோல் காப்பாளருக்கு ரூபா 5000 மும்,கலந்து கொள்ளும் அணிகள்
அனைத்துக்கும் சிறப்புப் பரிசிலும் வழங்கிக் கௌரவப்படுத்தப்படவுள்ளனர்
என்றார்.
இந்நிகழ்வில் பெர்னாண்டோ,நிசாந்த,பாடுமீன் பொழுது போக்குக் கழகத் தலைவர் எஸ்.கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.