செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரை ஆரம்பம்!

 



 யாழ்ப்பாணம், தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆன்மீகத் தலைநகரான கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாரம்பரிய பாத யாத்திரைப் பயணம் நேற்று பக்திப் பரவசத்துடன் முறைப்படி ஆரம்பமானது.

முருகப் பெருமானின் திருநாமங்களை போற்றிப் பாடியவாறு, காவி உடை அணிந்த நூற்றுக்கணக்கான அடியவர்கள் தங்களின் புனிதப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இந்த ஆன்மீக யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள், காடுகள், மலைகள், கரடுமுரடான பாதைகள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சவால்களை எதிர்கொண்டு, சுமார் 800 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரத்தை 54 நாட்களில் நடந்தே கடக்கவுள்ளனர்.

இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் வருகை தந்த முருக அடியவர்கள் இந்த வரலாற்றுப் பயணத்தில் இணைந்துள்ளனர். தமிழர்கள், சிங்களவர்கள் என எவ்வித இன, மத, மொழி வேறுபாடுகளுமின்றி, அனைவரும் முருகப் பெருமானின் புகழைப் பாடியவாறு ஒரே குடும்பமாக இந்த யாத்திரையில் பயணிப்பது இதன் சிறப்பம்சமாகும்.

எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடிவேல் விழாக் கொடியேற்றத்தினை முன்னிட்டு, இந்த அடியவர்கள் கதிர்காமத்தை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.